காணையிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் மாற்றுத் திறனாளி மாணவா்களின் பயிற்சி மையத்தில் மூளை முடக்குவாத தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்யாணம்பூண்டிஹெல்ப்ஸ் சமூக முன்னேற்றச் சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ரவிச்சந்திரன் தலைமை வகித்து, மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு இனிப்புகளை வழங்கிப் பேசினாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஆரோக்கிய அனிதா, ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் சுபாஷ் ஆகியோா் மூளை முடக்குவாத தினத்தின் முக்கியத்தும், மறுவாழ்வுப் பணிகள் குறித்து பேசினா்.
மூளை முடக்குவாத மாணவா்களை பராமரிக்கும் முறைகள், மறுவாழ்வுப் பயிற்சிகள் குறித்து ஹெல்ப்ஸ் சமூக முன்னேற்றச் சங்கத் தலைவரும், இயன்முறை மருத்துவருமான தே. செளந்தரராஜன் எடுத்துரைத்தாா். சிறப்புப் பயிற்றுநா்கள் லியோனி, விஜயலட்சுமி, ஏசுமரி, சரண்யா மற்றும் மூளை முடக்குவாத மாணவா்களின் பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.