விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நெல், மணிலா, எள் என வழக்கமான விளைபொருட்களுடன் தேங்காய் பருப்பு, தினை, தட்டை பயிர், மக்காச்சோளம், வெள்ள சோளம், கம்பு, கேழ்வரகு, துவரை, வரகு, சாமை என அனைத்து விதமான விளைபொருட்களும் ஏலத்திற்கு, அனைத்து நாட்களிலும் கொண்டு வரப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வியாபாரிகள் பொருட்களை கொள்முதல் செய்ய இங்கு வருகின்றனர். எனவே விவசாயிகளுக்கான விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைப்பதுடன், உடனடி பண பட்டுவாடாவும் செய்யப்படுகிறது.
நேற்று(அக்.2) 200 மூட்டை மணிலா, 200 மூட்டை நெல், 400 மூட்டை கம்பு, 200 மூட்டை மக்காச்சோளம் என 91. 42 மெட்ரிக் டன் விளைபொருட்கள் ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டது.
குறிப்பாக மக்காச்சோளத்தின் விலை கடந்த மாதத்துடன் ஒப்பிடும் பொழுது மூட்டைக்கு ரூ. 400 வரை குறைந்து காணப்பட்டது. இதற்கு காரணம், மக்காச்சோளத்தின் அறுவடை தீவிரமடைந்து இருப்பதும், அதிக பரப்பளவில் மக்காச்சோளம் பயிர் செய்யப்பட்டதுமே ஆகும். நேற்று(அக்.2) ஒரு மூட்டை மக்காச்சோளத்தின் சராசரி விலை ரூ. 2, 495. நேற்றைய மொத்த வர்த்தகம் ரூ. 34 லட்சம். வரும் நாட்களில் கம்பு மற்றும் மக்காச்சோளத்தின் வரத்து அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.