மத்திய அரசின் ஒரே பாரதம், உன்னதபாரத திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் யுவ சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் நாட்டிலுள்ள மாநிலங்களுக்கு கலாசார மற்றும் தொழில்நுட்ப சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் கலாச்சார பயணம் மேற்கொண்டுள்ள ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் யுவ சங்கத்தைச் சேர்ந்த 60 பேர் சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் வந்தனர். அவர்களுடன், சென்னை தேசிய தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் உஷா நடேசன், பேராசிரியர்கள் ஜி. ஜனார்த்தனன், ஷேசுபாபு, ஜம்மு ஐஐஎம் பேராசிரியர்கள் ஜெகன்நாத், ஹர்ஷா ஆகியோர் உடனிருந்தனர்.