விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர் சென்னை எழும்பூரில் நடைபெறும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்க தனியார் பேருந்தில் பயணம் செய்தனர். பேருந்து திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது ஒலக்கூர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். இதனால் விவசாய சங்கத்தினர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சென்னை செல்ல அனுமதித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.