திண்டிவனம், ஜூன் 11
திண்டிவனம் மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த மண்டலாபிஷேக நிறைவு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மீனாட்சி அம்மன் கோவில் வீதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ மீனாட்சி அம்மன், ஸ்ரீ பாலமுருகன் கோவில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கோவிலில் மீனாட்சி அம்மனுக்கு 48 நாட்கள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மண்டலாபிஷேக நிறைவு நாளை முன்னிட்டு மூலவர் மீனாட்சி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு திரு கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா குழு தலைவர், நகரமன்ற உறுப்பினர் ரேணுகா இளங்கோவன் செய்திருந்தார்.