விழுப்புரத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

173பார்த்தது
விழுப்புரத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி
விழுப்புரத்தில், மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் கல்லுாரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில், 'மாபெரும் தமிழ்க் கனவு' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. உயர்கல்வித் துறையுடன், தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகிறது. நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும் சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினரிடையே, கொண்டு செல்வதற்காக அரசு இந்நிகழ்ச்சியை நடத்துகிறது. மாவட்டம் தோறும் பல்வேறு கல்லுாரிகளில், தமிழ் கனவு பரப்புரை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த வகையில், விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரி அரங்கில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடந்தது. டி. ஆர். ஓ. , பரமேஸ்வரி தலைமை தாங்கினார். கவிஞர் நந்தலாலா, தமிழ் இலக்கியங்களும் சமூக நீதியும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் 800 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். தமிழ் பெருமிதம், சிற்றேட்டில் உள்ள துணுக்குகளை வாசித்து, சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாரட்டி பெருமிதச் செல்வி, பெருமிதச் செல்வன் என பட்டம் சூட்டி, சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது. தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் என்ற பட்டமும், பரிசும் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி