விழுப்புரம் மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்கள், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஆண்டுதோறும் வழங்குவதாக மாவட்ட தலைவர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் நலிவடைந்த மக்களுக்கான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆதவரற்றோர், முதியோர் இல்லங்களில் உள்ளோருக்கு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் தேவையான துணிகள், போர்வைகள் வழங்கப்படுகிறது.
இது மட்டுமின்றி, உலக பட்டினி தினத்தையொட்டி, கடந்த 2 ஆண்டுகளாக மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. காந்தி, காமராஜர், அம்பேத்கர், பெரியார் பிறந்த நாளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், அரசு மருத்துவமனைகளுக்கு ரத்த தானம், கண் தானம், உடல் தானம் செய்துள்ளனர்.
சாலையோரங்களில் உள்ள ஆதரவற்றோருக்கும், தேவையான உடைகள், உணவு ஆகியவற்றை வழங்கி வருகிறோம். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது..
மாநில தலைவர் புஸ்சி ஆனந்த், மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி ஆகியோர் ஆலோசனையின் பேரில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வருகிறோம். விஜய் பிறந்த நாள் வரும் 22ம் தேதி வருகிறது. இதனால், மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீதான அன்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு மோகன் கூறினார்.