ஆலம்பூண்டி, சத்தியமங்கலம் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் வெங்கடேசன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் பெரிய ஏரியின் பாசன வாய்க்கால் மற்றும் ஆலம்பூண்டி ஏரியின் வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகறற வேண்டி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
தற்போது மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் இந்த இரண்டு ஏரி வாய்க்காலிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக்கு தண்ணீர் வரவும், பாசனத்திற்கு தடை இன்றி தண்ணீர் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பணிகளை செய்யாவிட்டால் சத்தியமங்கலம், ஆலம்பூண்டியைச் சுற்றியுள்ள கிணறுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். அத்துடன் இந்த ஏரிகளில் இருந்து அடுத்துள்ள துாராம்பூண்டி, கூடப்பட்டு ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதற்கு வழி இருக்காது.
இதே நிலை நீடித்தால் ஏரிகள் நிரம்பாது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் பஞ்சமும் ஏற்படும்.
மேலும், சத்தியமங்கலத்தில் பைபாஸ் சாலை அமைத்த போது பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாயை மூடி விட்டனர். எனவே அழிக்கப்பட்ட கால்வயை மீண்டும் ஏற்படுத்தி தரவேண்டும்.