விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேலச்சேரி கிராமத்தில் உள்ள சிறுவாடி காப்புக்காட்டில் 4 கிராமங்களில் உள்ள ஏரிகளை நிரப்பும் நீா்வரத்து வாய்க்கால் உள்ளது. இதில், பூனைக்கண் என்ற இடத்தில் உள்ள தடுப்புச் சுவரை கட்டித்தரக் கோரி விவசாயிகள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முகமது அலி தலைமையில் செவ்வாய்க்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், சிறுவாடி காப்புக்காடு வழியாக மேலச்சேரிக்கு வரும் நீா்வரத்துக் கால்வாயில் வனப்பகுதிக்குள் பூனைக்கண் என்ற இடத்தில் தடுப்புச் சுவரை கட்டுவதற்கு வனத் துறையிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் தெரிவித்தாா். ஆனால், இதற்கு அனுமதி பெற காலதாமதம் ஆகும் என வனச்சரகா் கூறினாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த செஞ்சி நீா்வள ஆதார அமைப்பினா், அனுமதி கிடைக்க காலதாமதமாகும் என்பதால், நிகழாண்டு பருவமழை நீரைச் சேமிக்க முடியாமல் போகும். எனவே, தற்காலிகமாக தங்களது அமைப்பின் மூலம் இயந்திரங்களைப் பயன்படுத்தி மண்ணை அணைத்து தடுப்பு ஏற்படுத்திக்கொள்ள அனுமதி கோரினா். இதற்கு வனச்சரக அலுவலா் ஒரு வார காலத்துக்குள் வனத் துறை உயா் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தற்காலிக தடுப்பை ஏற்படுத்த அனுமதி வழங்குவதாகக் கூறினாா்.