வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு பெரிய குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன. பொக்லைன் எந்திரம் மூலம் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டியபோது பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி உள்ளது. அதனால் அந்த பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு பின்னர் தோட்டப்பாளையம் அருகந்தபூண்டி பெரியதெருவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனை பெண்கள் ஆர்வத்துடன் சென்று குடங்களில் பிடித்துள்ளனர். அப்போது குடிநீர் கலங்கிய நிலையில் துர்நாற்றம் வீசியபடி வந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் குடத்தில் பிடித்த குடிநீரை சாலையில் ஊற்றி சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் வேலூர்-காட்பாடி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், மாநகராட்சி அலுவலர்கள், உடைந்த குழாயை உடனடியாக சரிசெய்து சுகாதாரமான குடிநீர் வழங்குவதாகவும், பாதாள சாக்கடை பணிகள் விரைவில் நிறைவு பெறும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.