வேலூரை அடுத்த பெருமுகை இந்திராநகரை சேர்ந்தவர் கோகுல் (வயது 38). இவர் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் கார் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களின் 6 வயது மகன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கிறான். நேற்று காலை வழக்கம்போல் கோகுல் கடைக்கும், பள்ளிக்கு குழந்தையை அனுப்பி விட்டு மனைவி வேலைக்கும் சென்று விட்டனர். மாலை 6 மணியளவில் கோகுல் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் பின்னால் சென்று பார்த்தார். வீட்டின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு படுக்கையறையில் துணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
அறையில் இருந்த 3 பீரோக்களின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு கோகுல் மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.