வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர் 27 வயது பட்டதாரி பெண். கடந்த மாதம் மர்மநபர் இவருடைய செல்போன் எண்ணை நிதிதொடர்பான வாட்ஸ்-அப் குரூப் ஒன்றில் இணைத்து விட்டுள்ளார். அந்த குரூப்பில் இருந்த பலர் ஆன்லைனில் முதலீடு செய்ததால் அதிக லாபம் கிடைத்ததாக பதிவு செய்துள்ளனர். இதனை நம்பிய அந்த பெண் ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பாக தகவல்களை தெரிவிக்கும்படி அந்த குரூப்பில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து மர்மநபர் அந்த பெண்ணை வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு ஒரு இணையதள லிங்கை அனுப்பி, அதில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
சில நாட்களில் பட்டதாரி பெண் அந்த இணையதள லிங்கில் சென்று சுயவிவரங்களை பதிவு செய்து ஒரு வங்கிக்கணக்கில் 2 தவணைகளில் ரூ. 3 லட்சத்து 5 ஆயிரம் செலுத்தி உள்ளார். அதற்கு சில ஆயிரங்கள் லாபம் வந்துள்ளதாக ஆன்லைனில் காட்டி உள்ளது. அதை அந்த பெண் எடுக்க முயன்றார். ஆனால் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை.
மேலும் கூடுதல் பணம் கட்டினால் தான் எடுக்க முடியும் என்று குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து அந்த பெண் விசாரித்தபோது தான் மர்மநபர்கள் மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தார். இதுதொடர்பாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புனிதா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.