திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்துகோட்டை கிராமத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர் சுரேந்தர் (24). இந்த நிலையில் சுரேந்தர் ஊட்டிக்கு வேலைசெய்ய செல்வதாக கூறியுள்ளார். இரவு நேரத்தில் பேருந்து எதுவும் இல்லாததால் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (25), தயாநிதி (18) ஆகிய இருவரும் சுரேந்திரை பேருந்துக்கு அனுப்பி வைக்க ஒரே இரு சக்கர வாகனத்தில் கொத்தகோட்டை கிராமத்திலிருந்து வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை சக்திவேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் நோக்கிச் சென்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கட்டிட தொழிலாளர்கள் சுரேந்தர் (24), தயாநிதி (18) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற சக்திவேல் (25) படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய போலீசார் படுகாயம் அடைந்த சக்திவேல் என்பவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலிசார் கார் ஒட்டி சென்ற கோவிந்தராஜ் மீது கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.