ஆண்டியப்பனுரில் தமிழக விவசாய சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் மாநில இளைஞர் அணி தலைவர் பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் வேலுசாமி மற்றும் மாநில செயலாளர் பழனி முருகன் மற்றும் மாநில பொருளாளர் ராஜேஷ் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில தலைவர் வேலுசாமி பேசுகையில், தமிழக விவசாயிகள் தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு தமிழக அரசு பல ஆண்டுகளுக்கு முன் தடை விதித்தது.
தமிழகம் பொறுத்தவரை இன்றைக்கு 50 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னை மற்றும் பனை மரங்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் பயனடைகின்றனர். தமிழகத்தில் கலப்படம் இல்லாத ஒரு உணவுப் பொருளாக தென்னை மற்றும் பனை மரங்கள் உள்ளன. தமிழக விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக கள்ளுவிற்கு உண்டான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும்.
தமிழகத்தை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் கள்ளுவிற்கு உண்டான தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் எதற்காக இந்த தடை? உடனடியாக தமிழக அரசு முன்வந்து விவசாயிகளின் நலன் கருதி கள்ளுவிற்கு உண்டான தடையை நீக்க வேண்டும்.