இருக்கு ஆனா இல்ல! 30 சென்ட் நிலத்தை காணோம்! ஜடையனூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மூன்றாவது நாளாக காந்தி வழியில் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜடையனூர் பகுதியைச் சேர்ந்த ரஜினி மகன் அறிவுமணி (44) மாற்றுத்திறனாளி இவருக்கு 94.5 சென்ட் நிலம் இருப்பதாக தெரிகிறது. அதில் பங்காளி உறவுமுறையான முனிசாமி மற்றும் இவருடைய மனைவி கிருஷ்ணவேணி ஆகிய இருவருக்கும் இடையே 30 சென்ட் அளவிலான நிலப்பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அளந்து தரக்கோரி கடந்த திங்கட்கிழமை அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேலும் மனு மீது நடவடிக்கை எடுக்காவிடில் 27 ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கடந்த 27ஆம் தேதி முதல் இன்று வரை மூன்றாவது நாளாக அளந்து தராத அதிகாரிகளை கண்டித்தும் மேலும் உடனடியாக தனது நிலத்தை அளந்து காண்பிக்குமாறும் காந்தி வழியில் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் மாற்றுத்திறனாளியான இவர் மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.