சோளிங்கர் நகராட்சி 17-வது வார்டுக்கு உட்பட்ட பாண்டியன் நல்லூர் இரண்டாவது ரோடு பகுதியில் 3 குறுக்குத் தெருக்கள் உள்ளன. சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்தத் தெருக்களுக்கு முறையான சாலை, கழிவுநீர் கால்வாய், மின்சார வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் அங்கேயே தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.
வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முறையாக செல்ல கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீட்டுப் பகுதிகளிலேயே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் புதர்கள் அதிக அளவில் உள்ளதாலும், தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து, விஷப்பூச்சிகள் அடிக்கடி வீட்டுப் பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவதற்கு பயப்படுகின்றனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி முறையான சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கவும், மின்கம்பங்களில் மின்விளக்கு பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.