பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் நாளை ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் நாளை ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக பல்நோக்கு மருத்துவமனை பணியாளராக பணி நியமனம் செய்யப்பட்டு தற்போது வரை பணி நிரந்தரம் செய்யப்படாமல் தினக்கூலி பெற்று வருகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வெளிமாவட்டங்களில் பணியாற்றி வரும் ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் சொந்த ஊரின் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் பணிமாறுதல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதற்கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் நாளை (திங்கட்கிழமை) தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், 2-ம் கட்டமாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21-ந் தேதி சென்னை டி. எம். எஸ். வளாகத்தில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

அதன்படி வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நாளை மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தினர் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி