வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் அனுப்பு கிராமத்தில் விவசாயி கோதண்டராமன் என்பவர் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்குச் சென்ற கன்று குட்டி வீடு திரும்பாத நிலையில், விவசாய நிலத்தில் கன்று குட்டி உடல் பாகங்கள் சிதறி உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரும் வருவாய் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கால்நடை மருத்துவர்கள் இறந்த கன்று குட்டியை உடற்கூறு ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து ஆடு மாடுகளை சிறுத்தை தாக்கி வரும் சம்பவத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் வனப்பகுதியில் வந்து ட்ராப் கேமராக்கள் பொருத்தியுள்ள நிலையில் ட்ராப் மற்றும் ட்ரோன் கேமரா உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆனால் இதுவரை ட்ராப் கேமராவில் சிறுத்தை பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.