வேலூர் மாவட்டம், திருவலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பைக்குகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து காவல் நிலையங்களில் பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், திருவலம் சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை திருவலம்- பொன்னை கூட்ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்குகளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் திருவலம் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை செய்தனர். அதில், காட்பாடி அடுத்த விருதம்பட்டு மோட்டூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜா(36)), கரிகிரி கிராமம் மேல்பட்டி தெருவை சேர்ந்த பஞ்சாட்சரம் மகன் முருகன்(36) என்பதும், பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்கு பதிந்து ராஜா, முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை காட்பாடி சப்-கோர்ட் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.