வேலூர் மாங்காய் மண்டிக்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாங்காய்கள் விற்பனைக்காக வரவழைக்கப்படுகிறது. இங்கு பழுக்க வைக்கப்படும் பழங்களை வியாபாரிகள் தங்களுக்கு தேவையான அளவு மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கிச் செல்கின்றனர்.
மண்டியில் விற்கப்படும் பழங்கள் பாதுகாப்பான முறையில் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்ய ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார். அதன் படி வேலூர் மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரதாப்குமார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கைலேஷ்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் மற்றும் குழுவினர் இணைந்து திடீரென ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சில கடைகளில் அங்கீகரிக்கப்பட்ட ரசாயன பவுடரை டப்பாவில் வைத்து மாங்காயை பழுக்க வைக்காமல், பாதுகாப்பற்ற முறையில் பழங்களை பழுக்க வைத்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ஒரு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் 3 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர். பழங்களை பாதுகாப்பான முறையில் பழுக்க வைக்க வேண்டும் என்றும் அவர்கள் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.