ஆற்காட்டை அடுத்த கிருஷ்ணாவரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34), இவர் சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் வசித்த இவரது உறவினர் இறந்ததையொட்டி மணிகண்டன் நேற்று முன்தினம் (டிசம்பர் 25) இரவு வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்றார். நேற்று (டிசம்பர் 26) காலை வந்து பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த செயின், மோதிரம், வளையல், கம்மல் உள்ளிட்ட 17 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மணிகண்டன் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளைப் பதிவுசெய்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளைத் திருடிச்சென்ற மர்மநபர்களைத் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.