காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பாணாவரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பாணாவரம் போலீசார் சார்பில் போக்சோ சட்டம், மோட்டார் வாகன சட்டம், போதைப் பொருட்களை தடுப்பது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் ரூமானா தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் ரஷீத்கான், அன்பு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முனீர்பாஷா ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளிடையே போக்சோ சட்டம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், குறைந்த வயதுடைய சிறார்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் அதற்கான தண்டனைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
மேலும் பள்ளி வளாகத்தை சுற்றி நடைபெறும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது புகார் கொடுக்க இன்ஸ்பெக்டர், காவல் நிலையத்தின் தொலைபேசி எண் மற்றும் 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைப்போல பாணாவரம் அடுத்த மேல்வீராணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.