அரக்கோணம் அருகே புளியமங்கலம் ஸ்ரீராம் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி முழுவதும் சேதமடைந்து சாய்ந்தபடி ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும், மின்கம்பத்தை சுற்றியுள்ள சிமெண்ட் பூச்சு பெயர்ந்து உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு காணப்படுகிறது. எப்போது விழும் என்ற அச்சத்துடனே அருகில் உள்ள பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குழந்தைகளும் வெளியில் விளையாடுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதுகுறித்து மோசூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதமான மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.