வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் பணியாற்றும் கடை விற்பனையாளர்களுக்கான டிசம்பர் மாத ஆய்வு கூட்டம் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டுறவு சார்பதிவாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலக பொறியாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
கணினி உதவியாளர் கார்த்திக் வரவேற்றார். இதில் பொருட்கள் வழங்கும் நாளில் கடைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உரிய நேரத்திற்கு கடையை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்களை வழங்க வேண்டும். பொது மக்களிடம் இருந்து புகார்கள் வராதபடி சேல்ஸ்மேன்கள் பணியாற்ற வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டால் அதற்கான பணிகளை தாமதம் இன்றி விரைவாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் தாலுகாவுக்கு உட்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.