பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந் தேதி ராஜகோபுர திருப்பணிகளை மேற்கொள்ள பாலாலயம் செய்யப்பட்டு, ராஜகோபுரம், கோவில் சுற்றுச்சுவர்கள் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இந்தநிலையில், மூலவர் ரங்கநாதர் சன்னதி, தாயார் ரங்கநாயகி நாச்சியார் சன்னதி மற்றும் ராமர், கண்ணபிரான், ஆண்டாள், ராமனுஜர், மணவாள மாமுனிகள், ஆஞ்சநேயர் சன்னதிகள், விமான கோபுரங்கள் ஆகியவற்றிற்கு திருப்பணிகளை மேற்கொள்ள நேற்று பாலாலயம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு யாகசாலை, மூலவர் ரங்க நாதர், தாயார் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் பாலாலய பிரதிஷ்டை நடந்தது. பின்னர் திவ்ய பிரபந்த சேவை, பூர்ணாஹூதி, சாற்றுமுறை நடந்தது. நிகழ்ச்சியில் அணைக் கட்டு நந்தகுமார் எம். எல். ஏ. , இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு, ஆய்வாளர் செண்பகம், கோவில் செயல் அலுவலர் நடராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.