வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்பார்வையற்ற தம்பதியர் ராமதாஸ் மற்றும் விசாலாட்சி. இவர்கள் இன்று வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வரை அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
பள்ளிகொண்டா வந்தவுடன் கண்பார்வையற்ற ராமதாஸ் மற்றும் விசாலாட்சி பேருந்தில் இருந்து இறங்குவதற்கு முன் ஓட்டுனர் பேருந்து இயக்கியதால் ராமதாஸ் மற்றும் விசாலாட்சி ஆகிய இருவரும் பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர். உடனடியாக அங்கு இருந்த பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்டு உதவி செய்தனர்.
உடனடியாக அரசு பேருந்து நடத்துனரிடம் ராமதாஸ் மற்றும் பொதுமக்கள் கேட்டதற்கு அலட்சியமாக பதில் அளித்துள்ளார். அது மட்டுமின்றி கண்பார்வையற்ற ராமதாஸிடம் தினந்தோறும் இந்த பேருந்தில் மட்டும்தான் வருவீர்களா வேற பேருந்து தங்களுக்கு கிடையாதா என அலட்சியப்படுத்தும்படி பேசியதாக கூறினர். இதில் மனம் உடைந்த கண்பார்வையற்ற தம்பதியர்கள் வேதனையுடன் அரசு வழங்கிய பஸ் பாஸ் வைத்துக்கொண்டு தான் நாங்கள் வருகிறோம். எங்களை இவ்வளவு கேவலமாக நடத்துனரும் பேருந்து ஓட்டுனரும் நடத்துவது மிகவும் மன வேதனை அளிக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.