*ஜோலார்பேட்டை அருகே வானில் இருந்து மர்ம பொருள் விழுந்து ஐந்து அடி பள்ளம் ஏற்பட்டதால் அர்ச்சுனன் தவசி தெருக்கூத்து நாடகம் வைத்து பரிகாரம் தேடிய ஊர் பொதுமக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியில் ரவி என்பவருடைய நிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளது. இதனால் அந்த இடத்தில் சுமார் ஐந்து அடி அளவிலான பள்ளம் உருவானது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகினர். இந்தச் சம்பவம் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு பிறகு இது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஆய்வு செய்ய பரிந்துரை செய்ததை தொடர்ந்து மாவட்ட அறிவியல் மைய அலுவலர்கள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆனாலும் காலம் காலமாக உள்ள வழக்கப்படி தங்கள் பகுதியில் ஏதேனும் இடி அல்லது வானில் இருந்து மர்மப்பொருள் விழுந்தாலோ தெருக்கூத்து நாடகத்தில் ஒன்றான அர்ஜுனன் தவசி நாடகத்தை நடத்தி பரிகாரம் தேடுவது வழக்கம். அதன்படி தெருக்கூத்து நாடகம் நடத்தப்பட்டது.