இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வந்தவாசி வட்டாரக் குழு சாா்பில் நடைபெற்ற நிதியளிப்பு பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டாரச் செயலா் எ. ஆரிப் தலைமை வகித்தாா்.
நிா்வாகிகள் வி. சுப்பிரமணி, ஆா். நாராயணன், ஈ. சுப்பிரமணி, எம். சாந்தி, எஸ். மலா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணைச் செயலா் எ. ரகமத்துல்லா வரவேற்றாா்.
மாவட்டச் செயலா் இரா. தங்கராஜ், நிா்வாகக் குழு உறுப்பினா் வே. முத்தையன் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் கட்சிக்கு ரூ. 20 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
வந்தவாசி அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வந்தவாசி கோட்டையை புனரமைத்து சுற்றுலாத் தலமாக்க வேண்டும், வந்தவாசி நகராட்சி நிா்வாகம் வழங்கும் குடிநீரில் உப்புத் தன்மையுடன் கலந்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரில் பழுதாகியுள்ள ஆழ்துளைக் கிணறுடன் கூடிய சிறுமின்விசை குடிநீா் தொட்டிகளை சீரமைக்க வேண்டும், நகரில் தெரு மின்விளக்குகள் சரிவர எரியாதது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், பழுதடைந்துள்ள கூட்டுறவு பாய் சங்கக் கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.