வந்தவாசி: ஆட்டோ மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

51பார்த்தது
வந்தவாசி: ஆட்டோ மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஆட்டோ மீது கார் மோதியதில் தம்பதி உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர். வந்தவாசியை அடுத்த சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தர்மன் (40). ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது ஆட்டோவில் மனைவி ரமா (30), மகன் சவீன் (10) ஆகியோருடன் சொந்த ஊரான வந்தவாசியை அடுத்த தெள்ளாருக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்றுகொண்டிருந்தார். 

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, பொன்னூர் மலை அருகில் இவர்களது ஆட்டோ சென்றபோது, வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இன்வொர்ட்டர் பேட்டரி விற்பனையாளர் நரேஷ் (27) ஓட்டி வந்த கார் மோதியது. இந்த விபத்தில் தர்மன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

மேலும், பலத்த காயமடைந்த ரமா, சவீன், நரேஷ் ஆகியோர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் ரமா, சவீன் ஆகியோர் உத்திரமேரூர் தனியார் மருத்துவமனைக்கும், நரேஷ் சென்னை தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இதில், ரமா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தர்மனின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி