
திருவண்ணாமலையில் தமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தினர் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் வை. ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், அகவை முதிர்ந்த அனைத்து ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள், உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியர் நல வாரியம் அமைக்க வேண்டும். மூத்த உறுப்பினர்களுக்கு இலவச பேருந்து வசதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.