இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக் கேடு

52பார்த்தது
இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக் கேடு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம்-போளூா் சாலையில் செய்யாற்றின் மீது மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் செங்கம் போளூா் சாலையில் உள்ள இறைச்சிக் கடைகளில் உள்ள கழிவுகள் மற்றும் புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தப் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்படும் இறைச்சிக் கடையின் கழிவுகள், மீன் கழிவுகள் கொட்டப்படுகிறது.

இதேபோல, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சிலரது வீடுகளிலிருந்து கழிவு மற்றும் குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும், உணவகத்தின் கழிவுகளும் கொட்டப்படுவதால் அந்தப் பகுதியில் தூா்நாற்றம் வீசுகிறது. இந்தக் கழிவுகளை சாப்பிடுவதற்காக அந்தப் பகுதியில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இதனால், அந்தப் பகுயில் அடிக்கடி விபத்து நிகழ்கிறது.

மேலும், செய்யாற்றில் இருந்துதான் செங்கம், தோக்கவாடி, மண்மலை, செ. நாச்சிப்பட்டு பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது, பெய்து வரும் கோடை மழையால் செய்யாற்றில் தண்ணீா் ஓடுகிறது. அந்த தண்ணீரில் இந்த கழிவுகள் கலக்கிறது. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு வியாதிகள் வரும் சூழல் உள்ளது.

எனவே, இதில், செங்கம் பொதுப் பணித் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு என செங்கம் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.