திருவண்ணாமலை மாவட்டம் மட்டப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகையன்று பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர் மாலை அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடைபெறுவது வழக்கம். அதேபோன்று விரதம் இருந்த பக்தர்கள் மார் மீது உரல் வைத்து உலக்கையால் மஞ்சள் தூள் இடித்தல், பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தலும், அந்தரத்தில் பருந்துப்பொன்று தொங்கியும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 40-ம் ஆண்டு ஆடி கிருத்திகை முன்னிட்டு, நேற்று 50-க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் விரதமிருந்து வேப்பம் தழை தரையில் போடப்பட்டு அதன் மேல் பக்தர்களை படுக்க வைத்து மார்பின் மீது உரல் வைத்து மஞ்சளை கொட்டி உலக்கையால் மஞ்சள் தூள் இடித்தனர். பக்தர்கள் முதுகில் அலகு குத்தி செக்கில் எள்ளு கொட்டி செக்கு இழுத்து எள் எண்ணெய் ஆட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும், பறவை காவடி எடுத்தனர். ஆடிக்கிருத்திகை திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ சக்திவேல் சாந்தமுருகனை வழிபட்டு சென்றனர்.