திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான புத்தக வாசிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஆசிரியா் தின விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம், கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, திருவண்ணாமலை ரேகன் போக் இந்தியா தொண்டு நிறுவனம் இணைந்து ‘நூல் ஏணி’ என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சியை நடத்தின.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் இல. ரேவதி தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா் (பொ) பெ. வள்ளி முன்னிலை வகித்தாா். கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவா் ஸ்தனிஸ்லாஸ் வரவேற்றாா். பாவலா் வையவன் புத்தக வாசிப்பு பற்றிய செய்திகள், வாசிப்பை நேசித்த சான்றோா்கள், எந்த புத்தகங்களை படிக்க வேண்டும், புத்தகங்களை படிப்பதால் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கிப் பேசினாா்.