உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை எனும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1, 067 வருவாய் கிராமங்களில், மாதந்தோறும் ஒவ்வொரு வட்டாரத்திலும் 4 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதையொட்டி, திருவண்ணாமலை அடுத்த நல்லான் பிள்ளைபெற்றாள் கிராமத்தில், உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டத்தை கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது, கலெக்டர் பேசியதாவது: விவசாயிகள் பயன்பெறுவதற்கான சிறப்பு திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். அதன்படி, உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் துறை அலுவவலர்கள் கிராமத்தில் முகாமிட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதும் இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 23 விவசாயிகளுக்கு ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் உளுந்து விதைகள், நுண்ணூட்ட கலவை உள்ளிட்ட வேளாண் கருவிகள் மற்றும் வேளாண் இடுபொருட்களை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.