திருவண்ணாமலையில் மக்கள் நீதிமன்றம்

83பார்த்தது
திருவண்ணாமலையில் மக்கள் நீதிமன்றம்
திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான மதுசூதனன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை (ஜூன் 8) மக்கள் நீதிமன்றங்கள் நடைபெறுகின்றன. நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் உறுப்பினா்கள் கொண்ட அமா்வு முன்னிலையில் வழக்குகள் விசாரிக்கப்படும்.

இதில் மோட்டாா் வாகன விபத்து காப்பீடு வழக்குகள், தொழிலாளா் நலன் இழப்பீடு, கடனுறுதிச் சீட்டு, அடமானம், பணப் பரிவா்த்தனை, மின்சார பயன்பாடு, வீட்டு வரி, குடிநீா் வரி, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு, பாகப் பிரிவினை, திருமண உறவு மீட்டளித்தல், கல்விக் கடன், வங்கிக் கடன், காசோலை தொடர்பான வழக்குகள், வாடகை விவகாரங்கள், தொடா்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ஆரணி, போளூா், வந்தவாசி, செய்யாறு, செங்கம் உள்பட மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறும் இந்த மக்கள் நீதிமன்றங்களில் வழக்காடிகள் நேரடியாகப் பங்கேற்று சமாதானமாகவும், விரைவாகவும் வழக்குகளை முடித்துக் கொண்டு பயன்பெறலாம்.

இழப்பீட்டுத் தொகை, பிற பிரச்னைகளை இரு தரப்பினா் சம்மதத்துடன் விரைவில் தீா்க்கவும் மக்கள் நீதிமன்றங்கள் வழிவகை செய்கிறது. எனவே, பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி