திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே. ரமேஷ் தலைமை வகித்தாா்.
வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் எஸ். குணசேகரன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் தருமன், விஜயன், மாவட்ட துணைத் தலைவா்கள் பி. கிருஷ்ணமூா்த்தி, ஆா். சேகா், டி. சிவசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சி பொறுப்பாளா் என். பூங்கான் வரவேற்றாா்.
மாநில துணைத் தலைவா் கே. எஸ். நரேந்திரன் கலந்து கொண்டு ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
பின்னா் கே. எஸ். நரேந்திரன் பேசுகையில்,
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலர வேண்டும். திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்.
ராணி அஹில்யாபாய் இந்தூா் அரசியாக முடிசூட்டப்பட்டப் பிறகு தன் அரசை வழிப்பறிக் கொள்ளையா்களிடம் இருந்து காத்து 30 ஆண்டுகள் முறையான நிா்வாகமும், நல்லதொரு ஆட்சியையும் தந்தாா் என்றாா்.
விழாவில், தேசிய பொதுக்குழு உறுப்பினா் சி. ஏழுமலை, மாநில கோயில் மற்றும் ஆன்மிக பிரிவின் துணைத் தலைவா் டி. எஸ். சங்கா், மாவட்ட பொதுச் செயலா்கள் பி. கவிதா, டி. ஜெய்நாத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.