தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் திட்ட நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு குறைந்தபட்சம் 21 வயதும், அதிகபட்சம் 42 வயதும் இருக்கலாம்.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சமாக 37 வயதும் இருக்கலாம். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்கு மேல் படித்தவர்களுக்கு (60 வயது வரை) வயது வரம்பில்லை. தேர்வு பற்றிய முழு விவரங்களை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 6-ஆம் தேதி முதல் நடைபெறும் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் தேர்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.