திருவண்ணாமலை மாவட்டம், பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெறுகிறது. அதன்படி, நேற்று தீா்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3. 30 மணிக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, காலை 10. 30 மணிக்கு கோயில் திட்டிவாசல் வழியாக உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நிகழ்சிக்காக புறப்பட்டாா்.
உற்சவருக்கு வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் கூடி மண்டகப்படி கொடுத்து வழிபட்டனா். பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதிக்கு அருணாசலேஸ்வரா் வந்ததும் உற்சவருக்கும், சூலம் வடிவிலானஅருணாசலேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டன. பிறகு, சூலம் வடிவிலான அருணாசலேஸ்வரரை சிவாச்சாரியா்கள் கவுதம நதியில் மூழ்கி எடுத்து தீா்த்தவாரி நிகழ்ச்சியையும், தந்தையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட, திருவண்ணாமலையை ஆண்ட மன்னா்களில் ஒருவரான வல்லாள மகாராஜாவுக்கு அருணாசலேஸ்வரா் திதி கொடுக்கும் நிகழ்வையும் நடத்தினா். அப்போது, பள்ளிகொண்டாப்பட்டு, சம்மந்தனூா், திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். இவா்கள் தங்களின் முன்னோருக்கு திதி கொடுத்து, கவுதம நதியில் நீராடி அருணாசலேஸ்வரரை வழிபட்டனா்.