தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் வட தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் நகர் பகுதியிலும் கிராமப் பகுதிகளிலும் நேற்று மாலை 3 மணி முதல் 4 மணி வரையில் பரவலாக இடி மின்னலுடன் கன மழையாக பெய்தது. காலை முதல் மாலை வரை சுளீரென்று சுட்டெரித்த வெயில் வாட்டி வதைக்கையில் மாலை 3 மணி முதல் 4 மணி வரையில் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் கனத்த மழை பெய்தது. அதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. காலை சுட்டெரித்த வெயிலில் இருந்து மாலை பெய்த மழை வெயில் தாக்கத்திலிருந்து விடுவித்தது.