திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா ஷெரீப்(38), இவர் கடந்த 5ம் தேதி காலை ஆற்காடு சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் ரூ.24,000 டெபாசிட் செய்துள்ளார். அப்போது ஏடிஎம் மிஷினில் ரூபாய் நோட்டுகள் என்னும் சத்தத்தை கேட்டு தனது அக்கவுண்டிற்கு வந்து விடும் என்று நினைத்து ராஜா ஷெரீப் ஏடிஎம் மையத்திலிருந்து வெளியேறினார். நெடுநேரமாகியும் வங்கி கணக்கில் பணம் வரவில்லை. உடனடியாக அருகில் இருந்த வங்கி கிளை மேலாளரிடம் செலுத்திய பணம் வங்கி கணக்கில் வரவில்லை என்று புகார் அளித்தார். மேலும் செய்யாறு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஏடிஎம் மிஷினில் பதிவான சிசிடிவி கேமரா பதிவை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜா ஷெரீப் ஏடிஎம் மையத்தில் இருந்தபோது அவரைத் தொடர்ந்து ஏடிஎம் மையத்திற்கு வந்த இருவர் மிஷினில் இருந்து பணம் எடுத்தது தெரிய வந்தது. பின்னர் அவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று (ஜனவரி 10) இதுதொடர்பாக செய்யாறு டவுன் கொடநகர் காலனி அறிஞர் அண்ணா நகர் பகுதி சேர்ந்த முகமது லல்ட்டு(39), திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி(40) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்தனர்.