பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சண்முகம். அதே பகுதியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன்கள் தண்டபாணி, ஏழுமலை. இவர்களது விவசாய நிலம் அருகருகே உள்ளது.
இந்த நிலையில், விவசாயி சண்முகம், அவரது மனைவி சித்ரா ஆகியோர் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தண்டபாணி, ஏழுமலை ஆகியோரிடம், ஏன் கல்லை நட்டுள்ளீர்கள் என சண்முகம் கேட்டதாகத் தெரிகிறது.
அதன் காரணமாக இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏழுமலை, விவசாயி சண்முகத்தை கீழே தள்ளி உதைத்தாராம். மேலும், தண்டபாணி கையில் வைத்திருந்த மண்வெட்டியால் அவரது தலையில் அடித்து காயப்படுத்தியதாகத் தெரிகிறது. பின்னர், அண்ணன், தம்பி இருவரும் மிரட்டல் விடுத்தனராம்.
இதில், பலத்த காயமடைந்த விவசாயி சண்முகம் மற்றும் அவரது மனைவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இது குறித்து சண்முகத்தின் மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில், பெரணமல்லூர் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜுலு வழக்குப் பதிவு செய்தார். மேலும், தண்டபாணி, ஏழுமலை ஆகியோரை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.