திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் நேற்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 'உழவர் பேரியக்க மாநாடு' நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து பல லட்சம் பேர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், பாமக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு செங்கம் அருகே முறையாறு சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்து பாமக கட்சியினர் முற்றுகையிட்டனர். மாநாட்டு வாகனங்களுக்கு சுங்கச் சாவடியில் கட்டணமில்லாமல் செல்ல 2 வழிகள் ஒதுக்கப்பட்டன.
வேறு வழியில் சென்ற சில வாகனங்களில் ஃபாஸ்ட் டேக் மூலம் பணம் பிடித்துள்ளனர். முற்றுகையிட்டதை தொடர்ந்து பிடித்தம் செய்யப்பட்ட பணம் மீண்டும் வழங்கப்படும் என்று சுங்கச்சாவடியினர் கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.