செய்யாறு சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால், செய்யாற்றை சுற்றியுள்ள பகுதிகளில் பழைமை வாய்ந்த 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதமடைந்தன.
மேலும், மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் மின் விநியோகம் தடைபட்டது. அதேபோல், காஞ்சிபுரம் சாலை, புனித வியாகுல அன்னை தேவாலயம் போன்ற பகுதிகளில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி, மின் கம்பங்கள் சேதமடைந்த பகுதிகளான விக்னேஸ்வரா தெரு, கீழ்புதுப்பாக்கம் கிராம விரிவுப் பகுதி, ஆற்காடு சாலையில் ஆர்.சி.எம். பள்ளி, அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு சேதமடைந்த கம்பங்களை மாற்றி உடனடியாக மின்சாரம் வழங்க உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
புனித வியாகுல அன்னை தேவாலயம் அருகே நிறுத்தி வைத்திருந்த 3 சுற்றுலா வேன்கள் மீது அங்கிருந்த வேப்ப மரம் முறிந்து விழுந்ததில் சேதமடைந்தன. சேதமடைந்த சுற்றுலா வேன்களை பார்வையிட்ட எம்.எல்.ஏ. அதன் ஓட்டுநர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நிதியுதவி வழங்கியதுடன், அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். உடன் செய்யாறு சார்-ஆட்சியர் பல்லவி வர்மா, அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.