திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 10) முதல் மக்கள் குறைதீா் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள் உள்ளிட்டவை நடைபெறும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரம்தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிகளை தோ்தல் ஆணையம் விலக்கிக்கொண்டது.
எனவே, திங்கள்கிழமை (ஜூன் 10) முதல் வழக்கம்போல திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், செய்யாறு கோட்டாட்சியா் அலுவலகங்களில் மக்கள் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும்.
இதேபோல, மனுநீதி நாள் முகாம்கள், விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்களும் வழக்கம்போல நடைபெறும்.
இந்தக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.