திருவண்ணாமலை மாவட்ட அளவில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 10) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று வருகின்றனா்.
இந்த நிலையில், நேற்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான குடிநீா் வசதி, உணவு வசதி செய்யப்பட்டு உள்ளதா என்பதை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா், அவா்களுடன் சோ்ந்து மதிய உணவு சாப்பிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளா் நோய்லின் ஜான், மாவட்ட விளையாட்டு அலுவலா் சண்முகப்பிரியா மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.