திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மார்க்கெட் பகுதியில் திருவத்திபுரம் நகராட்சி சார்பில், நகர்புற வீடற்றோருக்கான காப்பகம் அமைக்கப்பட்டு, தனியார் அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் சுமார் 25 முதியோர் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் முதியவர்களுக்கு உணவு வழங்குதல், கலை நிகழ்ச்சி நடத்துதல் போன்றவற்றை மேற்கொண்டனராம். இதை அறிந்த இந்து முன்னணி மாவட்டச் செயலர் சரவணன் மற்றும் சிலர் சென்று மத போதனை செய்வதாக குற்றம் சாட்டி அங்குள்ள பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும், மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து காப்பக பணியாளர் விநாயகம் செய்யாறு போலீஸில் புகார் அளித்தார். காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப் பதிந்து இந்து முன்னணி மாவட்டச் செயலர் சரவணன் (45), தேவரங்கன் (34), பாபு (31) ஆகியோரை கைது செய்து, செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.