திருவண்ணாமலை: ஸ்கேன் மையங்களின் உரிமையாளா்களுடனான ஆய்வுக் கூட்டம்

52பார்த்தது
திருவண்ணாமலை: ஸ்கேன் மையங்களின் உரிமையாளா்களுடனான ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியார் ஸ்கேன் மையங்களின் உரிமையாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தலைமை வகித்து மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் ஸ்கேன் மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், தனியார் ஸ்கேன் மைய உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி அவர் பேசியதாவது: மாவட்டத்தில் குறைந்து வரும் பாலின விகிதத்தை உயர்த்த பரிசோதனை மையங்கள், பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களிடம் தேவையான விழிப்புணர்வு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

கர்ப்பிணி தாய்மார்களின் கர்ப்பம், குழந்தை கூட்டுக் கண்காணிப்பு மதிப்பீடு ஆகியவற்றை தனியார் மருத்துவமனைகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இனப்பெருக்கம், குழந்தை ஆரோக்கியம் பதிவு இல்லாத கர்ப்பிணி தாய்மார்களுக்கு இணையதளம் மூலம் சுய பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும். மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் பரிசோதனைகள் குறித்த அறிக்கையை தனியார் ஸ்கேன் மையங்கள் சமர்ப்பிக்க வேண்டும். போலி மருத்துவர்கள் எவரேனும் கண்டறியப்பட்டால் அது குறித்த விவரத்தை உடனே மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி