திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.பி. எம். சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன், செய்யாறு சார்-ஆட்சியர் பல்லவி வர்மா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரும், தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான தீபக் ஜேக்கப் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு செய்தார். குறிப்பாக, வெள்ள சேதவிவரம் குறித்த கணக்கெடுப்புப் பணி, சீரமைப்புப் பணிகள், நிவாரணம் வழங்கப்பட்ட விவரம், மாநகராட்சி, நகராட்சிகள், ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.