திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற கோபுர தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா ஜூன் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து அன்று இரவு அன்ன வாகனத்திலும், மறுநாள் இரவு சிம்ம வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. மூன்றாம் நாளான சனிக்கிழமை இரவு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் இரவு அனுமந்த வாகனத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது. நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு நாக வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 5-ஆம் நாள் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கோபுர தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
பின்னர், காலை 7 மணியளவில் கருட வாகனத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் போளூர் சாலையில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்துக்கு ஊர்வலமாக வந்தது. அப்போது, அறங்காவலர் குழுத் தலைவர் அன்பழகன் தலைமையில் வாணவேடிக்கை, ஒயிலாட்டம், சிலம்பாட்டத்துடன் கோலாகலமாக ஊர்வலம் நடைபெற்றது. கங்கைகொண்டான் மண்டபத்தில் சுவாமி பக்தர்களுக்கு மாலை வரை அருள்பாலித்தார்.