திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் வந்து தரிசனம் செய்வது வழக்கம். அவர்களுடன் ரசிகர்கள் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். இந்த நிலையில், விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவராவ் என்பவர், சுமார் 3 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்தபடி, அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம், பிரேஸ்லெட் ஆகியவற்றைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எப்போதும் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து பொது வெளியில் நடமாடும் சாம்பசிவராவ், துபாயில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அவர் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து, நவகிரக சன்னதியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை வழங்கப்பட்டது. இதனிடையே, தங்கம் விற்கும் விலையில் இவ்வளவு நகை அணிந்திருந்த சாம்பசிவராவை ஆச்சரியத்துடன் பார்த்த பக்தர்கள், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.